Tuesday, March 17, 2015

லாப நோக்கம்



                       உண்மை ஆட்சிபுரியும் மருத்துவ மனைகள் உங்களைக் காப்பாற்றும்!                             

இரட்டை மருத்துவம்   
கைவிடப்பட்ட நோயாளிகளைக் கூட அரசு பொது மருத்துவமனைகளில் குணப்படுத்திவிடுகிறார்களே! எப்படி சாத்தியமாகிறது?

1.ஒன்று எனக்கு எரிச்சலையும், கோபத்தையும், மன அழுத்தத்தையும் கொடுப்பது. தொலைக்காட்சிகளில் வரும் நெடுந்தொடர்கள். யதார்த்தம் இல்லாத நிகழ்ச்சிகளின் ஓட்டம். நெஞ்சில்குத்தப்பட்டு கத்தி எடுக்கப்படாமல் மூன்று நான்கு நாடகள் கதாநாயகனை அப்படியே போட்டு வைத்திருப்பார்களாம். அறுவை சிகிச்சைக்கு ரூ. 15 லட்சம் பணத்துக்காக, ஒவ்வொரு கதவாக தட்டுவார்களாம். இலவசமாக சிகிச்சையளிக்கும் அரசு மருத்துவமனைகள் இருப்பதாகவே அந்த தொடர்கள் காட்டுவதே இல்லை. அரசு மருத்துவமனைகளை (Govt. Hospitals) தீண்டத்தகாத மருத்துவமனைகளாக சித்தரித்துக் காட்டுகிறார்கள். நெஞ்சு பொறுக்க முடியாமல்தான், மக்களுக்கு உண்மை தெரியவேண்டும் என்பதற்காகத்தான் இதை எழுதுகிறேன்.

2. ஒவ்வொறு நாளும், நூற்றுக்கணக்கான விபத்துகளில் காயமடைந்தவர்களை, உயிருக்குப் போராடுபவர்கள் உட்பட காப்பாற்றி அனுப்புவது எந்த மருத்துவ மனைகள்? அரசு மருத்துவமனைகள்தான். நான் 5 முறை எனது மூக்கினுள் ஏற்பட்ட சதை மற்றும் வளைந்த மூக்கினை சரி செய்ய நடந்த அறுவை சிகிச்சைகள் அத்தனையையும் மதுரை, சென்னை, தேனி ஆகிய அரசு பொது மருத்துவ மனைகளில்தான் செய்து கொண்டேன்.  பல கைவிடப்பட்ட எனது உறவினர் நோயாளிகள் (patients), அரசு மருத்துவமனைகளில்தான் காப்பாற்றப் பட்டிருக்கிறார்கள்.

3. நான் உசிலம்பட்டியில் உதவி செயற்பொறியாளராக வேலை பார்த்த பொழுது, என்னுடைய வணிக ஆய்வாளர் (commercial inspector), தன்னுடைய குழந்தைக்கு உடல் நலமில்லை என்று ஒரு மாதம் விடுமுறையில் சென்றார். இடையில் சம்பளம் வாங்க அலுவலகம் வந்தவர் என்னை வந்து பார்த்தார். “பையன் எப்படி இருக்கிறான்என்று கேட்டேன். கேட்ட மாத்திரத்தில் அவரது கண்களிலிருந்துபொல, பொலவென கண்ணீர் கொட்டி தேம்பி தேம்பி அழ ஆரம்பித்தார். “ஏன் அழறிங்க? என்னன்னு சொல்லுங்க!” என்று கேட்டேன். “அவன் பொழக்கமாட்டான்னு சொல்றாங்க!” அவர் மருத்துவமனையில் செய்த சிகிச்சையெல்லாம் விபரமாக சொன்னார். கேட்டுவிட்டுமதுரை இராசாசி மருத்துவமனையில் சேருங்கள்! கடவுள் கைவிடமாட்டார்என்று சொல்லி அனுப்பி வைத்தேன்.

4 15 நாட்கள் கழித்து வந்தவர், என்னுடைய இரண்டு கைகளையும் பிடித்துக் கொண்டு,தனது தலையை அக்கைகளில் வைத்துத் தேம்பித் தேம்பி அழுதார். “அழுகையை நிறுத்துங்கள்! என்னென்று சொல்லுங்கள்!” என்று கேட்டேன். அழுகையை நிறுத்தி விட்டுநீங்க கடவுள் சொன்னது போலச் சொன்னிங்க! நீங்க சொன்னதுபோல மதுரை அரசு பொது மருத்துவமனையில் சேர்த்து என் மகன் இப்போழுது நன்றாக இருக்கிறான்என்று சொன்னது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது.

5. அரசு மருத்துவமனைகளில் தினசரி ஆயிரக்கணக்கான நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப் படுகிறது. பல்வேறு சிக்கலான (complicated) நோய்களைக் கொண்ட நோயாளிகளும் அங்கு வருகிறார்கள். இவ்வாறு பல்வேறு நோய்களைக் குணப்படுத்துவதில் அங்குள்ள டாக்டர்களுக்கு நல்ல அனுபவப்பயிற்சி கிடைக்கிறது. மருத்துவப் படிக்கும் மாணவர்களைத் தவிர்த்து விட்டால், பயிற்சி பெறும் டாக்டர்கள் (House Surgeons), இளம் டாக்டர்கள் (Junior Doctors), முதுநிலை டாக்டர்கள் (Senior Doctors) என ஒரே இடத்தில் ஆயிரக்கணக்கான மருத்துவ வல்லுநர்கள் இருக்கிறார்கள். இவர்கள் ஒருவருக்கொருவர் மருத்துவ கருத்துக்களை பரிமாறிக்கொள்ள வாய்ப்புக்கள் அதிகம். ஏன்! படிக்கும் மாணவர்களிடமிருந்து கூட சிறந்த மருத்துவ கருத்துக்கள் கிடைக்கலாம்! உதாரணத்திற்கு எனக்கு ஏற்பட்ட நிகழ்ச்சி ஒன்றினை கூறுகிறேன்.

6. நான்காவது இறுதி முறையாக (1993, சூன்) மூக்கினுள் வளர்ந்த சதை (nasal polip) அறுவை சிகிச்சையின் (operation) மூலம் மதுரை அரசு மருத்துவமனையில் அகற்றப்பட்டது. மறுநாள் எனது மூக்கினுள் அடைக்கப்பட்டிருந்த மருந்து கலந்த துணியை ஒரு இளவயது டாக்டர் (Junior Doctor) அகற்றிக் கொண்டிருந்தார். அவரிடம் நான் மிகவும் நொந்து போய் வருத்தத்துடன் கேட்டேன், “இனிமேல் சளி பிடிக்காதுங்களா, சதை வளராதா, டாக்டர்!” அதற்கு அவர், “சதையை எடுத்தவர்கள், வளைந்த மூக்கை ஏன் நிமிர்த்தவில்லை என்று தெரியவில்லையே! அதை நிமிர்த்தினால்தான் சளி பிடிக்காமலிருக்கும். நாளைக்கு ரவுண்ஸ்க்கு (rounds) சீவ் வரும்போதுவளைந்த மூக்கை ஏன் நிமிர்த்தவில்லை என்று கேளுங்கள்,ஆனால் நான் சொன்னேன் என்று சொல்லாதீர்கள்!’ என்று சொன்னார்.

7. மறுநாள் தலைமை டாக்டரிடம் கேட்டேன், “எனது வளைந்த மூக்கையும் நிமிர்த்தியிருக்கலாமே, டாக்டர்!” என்று வருத்தத்துடன் கேட்டேன். அதற்கு அவர், “நீங்கள் பலவீனமாக இருக்கிறீர்கள், அதனால்தான் அந்த ஆபரேசன் செய்யவில்லை! அதனால் என்ன, அடுத்த ஆண்டு உடலை நன்றாக தேத்திக் கொண்டு வாருங்கள், வளைந்ததை ஆபரேசன் செய்து நிமித்தி விடலாம்!” என்றார். எனக்கு அவர் சொன்னது ஆறுதலாக இருந்தது.

8. பிறகு 2007 சூன் மாதம் தான் தேனி அரசு மருத்துவமனையில் வளைந்த மூக்கு நிமிர்த்தி சரி செய்யப் பட்டது. அன்றைக்கு அந்த இளம் டாக்டர் சொல்லியிருக்காவிட்டால், சதையை நீக்கிய பிறகும் ஏன் சளி பிடிக்கிறது என்று தெரியாமல் குழப்பத்துடன் மனவேதனையில் இருந்திருப்பேன்.

9. மேலும், மருந்து தயாரிக்கும் பெரிய கம்பெனிகள், அவர்களுடைய வல்லுநர்களை அனுப்பி, அவர்களது செலவிலேயே ஒரு கலந்துரையாடல் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்து, அவர்களது நிறுவன தயாரிப்பு மருந்து பொருட்களைப் பற்றிய சொற்பொழிவு கொடுப்பார்கள்.

10 இதேபோல, வெளிநாடுகளிலிருந்தும், உள்நாடுகளிலிருந்தும் பிரபல டாக்டர்கள் வந்து தங்களுடைய அனுபவங்களை எடுத்துரைப்பார்கள். அந்த கூட்டங்களில் அனைத்து டாக்டர்களும் பங்குகொள்வார்கள்; சந்தேகங்களைக் கேட்டு நிவர்த்தி செய்துகொள்வார்கள்.

11.  பிறகு மாதத்திற்கு ஒருமுறை தலைமை டாக்டர் (Dean) தலைமையில் முதுநிலை டாக்டர்கள் கூடி, சிக்கலான நோயாளிகளுக்கு அளிக்க வேண்டிய சிகிச்சை முறைகளைப் பற்றி அலசி ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வருவார்கள்.

12. மற்றொன்றையும் சொல்லியாக வேண்டும். அரசு மருத்துவமனைகளில்தான்ஆபரேசன் தியேட்டர் சாவுமிக மிக குறைவாக இருக்கும். காரணம் அவ்வளவு சுலபத்தில் ஒரு நோயாளியை அறுவை சிகிச்சைக்கு அனுமதிக்க மாட்டார்கள். அவருடைய சர்க்கரை அளவு, இரத்த அழுத்த அளவு, சளியின் அளவு முதலியன அறுவை சிகிச்சை செய்வதற்குறிய சரியான அளவுகளில் இருந்தால்தான் மயக்க மருந்து கொடுக்கும் டாக்டர்(Doctor recommending for the administration of anesthesia) அறுவை சிகிச்சைக்கு அனுமதிப்பார். இதில் எனக்கு ஏற்பட்ட அனுபவம் சரியான உதாரணமாக இருக்கும்.

13. 1979-ல் மதுரையிலும், 1982-ல் சென்னையிலும் மீண்டும் 1992-ல் மதுரையிலும் மூக்கினுள் வளர்ந்த சதை  அறுவை சிகிச்சையின் மூலம் அகற்றப்பட்டது. அங்கு முதல் நாள் வெளிநோயாளியாக சிகிச்சை எடுத்த மறுநாள் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு, மூன்றாம் நாளில் அறுவை சிகிச்சை முடிந்து விட்டது. ஆனால் மதுரையில் 1993 ஆம் ஆண்டு மார்ச் 15-ந் தேதி அன்று, (4-வது முறையாக) அறுவை சிகிச்சை செய்ய முடிவெடுத்தாலும் மயக்க மருந்து கொடுக்கும் டாக்டர் (Doctor for recommending anesthesia) உள்நோயாளியாக அனுமதிக்கவில்லை. காரணம் எனது உடல் பூராவும் சளி கட்டியிருப்பதாகவும் அதை குறைத்துக் கொண்டு வரும்படி சொல்லிவிட்டார். இதேபோல மூன்று முறை திருப்பி அனுப்பப்பட்டேன்.

14. ஒன்றரை மாதத்திற்குப் பிறகு, சளி அவர்கள் நிர்ணயித்த அளவுக்கு குறைந்த பிறகுதான் அறுவை சிகிச்சையை மேற்கொண்டார்கள். மூன்றாவது முறையாக என்னை திருப்பி அனுப்பும்போது, எனது வேதனையை பார்த்த ஒரு இளம் பெண் டாக்டர், “உங்கள் நன்மைக்குத்தான் சளியை குறைக்கச் சொல்கிறோம். நிறைய சளியுடன் ஆபரேசன் செய்தால் உயிருக்குக் கூட ஆபத்து வரலாம்என்று எனக்கு ஆறுதல் சொல்லி அனுப்பி வைத்தார்.

15. முதல் இரண்டு முறை அறுவை சிகிச்சை செய்யும்போது இல்லாத சளி, இந்த முறை மட்டும் சளி எப்படி உடல் பூராவும் நிரம்பிருக்கு என்று எனக்கு வியப்பாக இருந்தது. அதற்கு இறைவனின் பதில் கிடைத்தது. ஒன்றரை மாதங்களாக இறைவன் என்னை இயற்கை உணவான பச்சைக் காய்கறிகளையும், பழஙகளையும் சாப்பிட வைத்து ஆராய்ச்சி செய்தான். அந்த இயற்கை உணவுதான் எனக்கு உடல் பூராவும் சளியை நிரம்பச் செய்து விட்டது. அதிலிருந்துதான்இயற்கை உணவு நோய்களைத் தருகிறதுஎன்ற அரோமணியின் 2-வது விதியை இறைவன் அளித்தான்.

16. . 5-வது முறையாக தேனி அரசு மருத்துவமனையில் வளைந்த மூக்கை நிமிர்த்த 4 முறை இரத்த அழுத்தத்தை (blood pressure) குறைத்து வரச்சொல்லி திருப்பி அனுப்பிவிட்டார்கள். 2 மாதங்கள் கழித்து இரத்த அழுத்தம் சரியான அளவு வந்தவுடன்தான் அறுவை சிகிச்சைக்கு அனுமதித்தார்கள்.

17. . அரசு மருத்துவ மனைகளில் வழங்கபடும் மருத்துவ சேவைகளை சில வசதிக் குறைவுக்காக மக்கள் அங்கு சிகிச்சை எடுத்துக் கொள்ள தயங்குகிறார்கள். இந்த இடத்தில் நான் வியக்கும்படியான நிகழ்ச்சி ஒன்றினை சொல்ல விரும்புகிறேன்.

18. நானும் இன்னும் சிலரும் அறுவை சிகிச்சைக்குத் தயாரான நிலையில், அறுவை சிகிச்சை அறைக்குப் பக்கத்தில் உட்கார்ந்திருக்கிறோம். அப்பொழுது, அறுவை சிகிச்சை ஆடையுடன் ஓரு டாக்டர் துப்புரவுப் பணியாளன் பெயரைச் சொல்லிக் கொண்டே அறுவைச் சிகிச்சை அறையிலிருந்து வெளியில் வந்தார். நாங்கள் உட்கார்ந்த அறையையும் தாண்டி தேடிப்பார்த்துவிட்டு, தேடி வந்த ஆள் இல்லை என்றதும், ஒரு மூலையில் வைக்கப்பட்டிருந்த குப்பைக் கூடைப் பக்கம் போனார். அந்த கூடையை சுற்றிக் கிடந்த ரத்தம் தோய்ந்த பஞ்சு, துணிகளை குப்பைக் கூடைக்குள் எடுத்துப் போட்டுவிட்டு, அதை எடுத்து ஆபரேசன் தியேட்டருக்குள் போனார்.

19. போனவரைப் பார்த்தால் முதுநிலை படித்த (post graduate) முதுநிலை டாக்டராகத்தான் (senior doctor) இருக்க வேண்டும். ஒரு எம்.டி படித்த முதுநிலை டாக்டர் எந்த அறுவருப்பையும் முகத்தில் காட்டாமல் இரத்தக் கழிவுகளை குப்பைக்கூடைக்குள் எடுத்துப் போட்டு செல்கிறார் என்றால், மக்கள் இறைவனின் ஆசி பெற்ற, நல்ல மருத்துவ சேவையை பெற ஒரு 10 நாட்கள் ஒரு சில குறைபாடுகளைப் பொறுத்துக் கொண்டு சிகிச்சை எடுக்கக்கூடாதா! அரசு மருத்துவமனைகளில் அரசு இலவசமாக வழங்கும் மருத்துவ சேவைகளை பெற்று மக்கள் பயன்பெற வேண்டும் என்பதுதான் எனது விருப்பம்.

20. சுருங்கச் சொன்னால், அரசு மருத்துவ மனைகளில் அளிக்கப்படும் மருத்துவசேவை சிறந்த அனுபவம் பெற்ற டாகடர்கள், செவிலியர்கள் மற்றும் மற்ற பணியாளர்களாலும், அளிக்கப்படுகிறது; லாப நோக்கம் இல்லாதது; தன்னலம் இல்லாதது; அச்சேவையில் உண்மை மறைந்து கோலோட்சி நிற்கிறது; இறைவனின் அருள் அச்சேவையில் முழுமையாக நிறைந்துள்ளது. இதனால்தான் கைவிடப்பட்ட நோயாளிகளும் காப்பாற்றப்படுகிறார்கள்.
ஹீலர், மருத்துவ மனப்பயிற்சி நிபுணர், பொறிஞர்.இரா.அ.பரமன் Please visit website: www.medicineliving.blogspot.com; Email:twinmedicine@gmail.com
Copyright to R.A.Bharaman (Aromani), 9442035291