Saturday, September 20, 2014

உங்களுக்கு வேண்டுமா-10

     இறைவனின் அறிவு (knowledge) உங்களுக்கு வேண்டுமா?        


 C 249-MM 2-கவனவாழ்க்கை இரட்டை மருத்துவம்-மருத்துவ மனபயிற்சி மருத்துவம் பகுதி 2
               Twin Medicine-Medicine of Medicinal Meditation II-Attentive Life 10-TAMIL
                          கவனவாழ்க்கை 10
1.இந்து மதம் மூன்று பகுதிகளைக் கொண்டது. உபநிடதங்கள், பிரம்மசூத்திரங்கள், மற்றும் பகவத் கீதை. வேதத்தில் ஒரு பகுதிதான் உபநிடதங்கள். வேதம் இரண்டு பிரிவுகளைக் கொண்டது. ஒன்று ஞான காண்டம், மற்றொன்று கர்ம காண்டம்.

2. கர்மயோகத்தின் விதிப்படி, ஒருவன் செய்த ஒரு கர்மத்தை, அது தனக்கு உரிய பலனை விளைவித்து முடிக்கும் வரையிலும் அழிக்க முடியாது. நான் ஒரு தீய செயலைச் செய்தால், அதற்க்குரிய துன்பத்தை நான் அனுபவித்தே ஆக வேண்டும். இந்தப் பிரபஞ்சத்திலுள்ள எந்தச் சக்தியாலும் இதைத் தடுக்கவும் முடியாது. அதே போல, நான் ஒரு நல்ல காரியத்தைச் செய்தால், அது தனக்குரிய நல்ல பலனை விளைவிப்பதைப் பிரபஞ்சத்திலுள்ள எந்தச் சக்தியாலும் தடுக்க முடியாது.

3. ஆனால், மக்கள் வியாபாரம் தொடங்கினால், லாபம் கிடைத்து வியாபாரம் வளர்ச்சியடைய, நல்ல நேரம் பார்க்கிறார்கள். வீடு கட்ட அடிக்கல் நாட்ட, புதிய வீட்டில் பால் காய்ச்ச, அலுவலகத்தில் வேலை துவங்க, முக்கியமான ஆவணங்களில் கையெழுத்துப் போட ஆகிய அனைத்திற்கும் நல்ல நேரம் கெட்ட நேரம் பார்த்து செயல்படுகிறோம். வீட்டை விட்டு வெளியில் வேலை செய்யப் புறப்படுவதற்குக் கூட நல்ல நேரம் கெட்ட நேரம் பார்க்கிறார்கள். கட்டப்பட்ட கட்டிடத்தில் சில மாற்றங்கள் செய்தால், முன்னேற்றம் ஏற்படும் என்று நம்பி செலவுகள் செய்கிறார்கள். அதாவது, நேரம் மற்றும் கட்டிடக் குறைபாடுகள்தான் மக்களுக்கு நன்மை தீமைகளை தருகிறது என்ற அறியாமையால் விளைந்த தவறான கோட்பாட்டினை மக்கள் கண்மூடித்தனமாகப் பின்பற்றுகிறார்கள். மக்களின் இச் செயல்கள் இந்து மதத்தில் சொல்லப்பட்டுள்ள, கர்மயோகத்திற்கு விரோதமானது. இந்து மதத்திற்கு விரோதமானதை இந்துக்களாகிய நாமே செய்யலாமா? வேறு மதத்தினர் அவர்களது மதத்திற்கு எதிராக செயல்படுகிறார்களா? திருவள்ளுவர் பெருமான், சிலம்பு இளங்கோவடிகள், ‘யாதும் ஊரே! யாவரும் கேளிர்!’ என்று பாடிய பூஙகணியன் குன்றனார், மாதவியின் மகள் மணிமேகலை, காஞ்சிப் பெரியவர் ஆகியோரின் கூற்றுக்களுக்கு எதிரானது பரிகாரம் செய்வது.

4. ஜோதிடம் எதிர்காலத்தைக் கணிக்கிறது. அதுவே இறைவனுக்கு எதிராகச் செயல்படுவதுதான். இது, இறைவன் மறைபொருளாக வைத்திருக்கும் எதிர்காலத்தை வெளிக்கொணரும் முயற்சியாகும். இந்த முயற்சி மிகவும் மோசமான விளைவையே ஏற்படுத்தும்.
5. ஜோதிடம் பார்த்துவிட்டுப் புறப்படும் சமயத்தில், அந்தத் தாயிடம்அம்மா! பையனுக்குத் தண்ணீரில் கண்டமாக இருப்பதால், இன்றையிலிருந்து மூன்று மாதங்களுக்குகப் பையனைக் கவனமாகப் பார்த்துக் கொள்ளுங்கள்!” என்று ஜோதிடர் சொல்லுவார். தண்ணீரில் கண்டம் என்பது கடலிலா, நதியிலா, குளத்திலா, எந்த ஊரில், எந்த நேரத்தில் நிகழப்போகிறது என்பது போன்ற விபரங்கள் எதையும் ஜோதிடர் கூறமாட்டார்; இந்த விபரங்களை அவரால் கணிக்க முடியாது. அங்கேதான் இறைவன் இருக்கிறார். இப்படியான அறைகுறைத் தகவல்களால், அந்த தாய்நான் மூன்று மாதத்திற்கு எப்படி என் பையனைக் காப்பாத்தப் போகிறேன்!” என்று புலம்பிக் கொண்டே மனவழுத்தத்துடன் செல்கிறார். ஜோதிடம் பார்த்ததில் அவருக்கு மனவழுத்தம் அதிகரித்ததுதான் பலனாகும். ஆனால் மனவழுத்தத்தைக் குறைப்பதுதான் ஆன்மீகத்தின் நோக்கமாகும்; மனவழுத்தமற்ற வாழ்க்கையே ஆன்மீகத்தின் உச்சமாகும். ஆகவே ஜோதிடம் கணித்துச் சொல்லுவது ஆன்மீகத்துக்கு எதிரானதாகும்.

6. ஜோதிடம் கணிப்பவர்கள் ஒவ்வொரு தோஷத்திற்கும் ஒரு பரிகாரம் சொல்லுவார்கள். பரிகாரங்கள் அனைத்தும் ஏதாவது ஒரு கோயிலுக்குச் சென்று நெய் விளக்குப் போடுதல், வடை மாலை சாத்துதல், இரண்டு பச்சை வாழை இலைத் தண்டுகளுக்குத் திருமணம் செய்து வைத்தல் போன்றவற்றைச் செய்யச் சொல்லுவார்கள். இதனால் ஜோதிடரும், பரிகாரம் செய்து வைப்பவரும் ஒருவருக்கொருவர் பயனடைந்து கொள்கின்றனர்.
7. ஒருவர் செய்த தவறுக்கு பரிகாரமோ மன்னிப்போ கிடையாது என்று கர்மயோகம் சொல்கிறது. பாவ புண்ணிய தராசுத் தட்டுகளில் புண்ணியத் தட்டின் எடையை அதிகரிக்கச் செய்ய வேண்டும். அது ஒன்றுதான் தோஷத்திற்குப் பரிகாரமாகும்.

8. புண்ணியத் தராசுத் தட்டின் எடையை எப்படி அதிகரிக்கச் செய்வது?
மற்றவர்களிடம் அன்பு செலுத்தவேண்டும்; பிறருக்கு உதவியாக இருக்க வேண்டும்; தான தர்மங்கள் செய்ய வேண்டும்; எண்ணத்தாலும், சொல்லாலும், செயலாலும் எவருக்கும் தீங்கு செய்யக்கூடாது. சுருங்கச் சொன்னால், வாழ்க்கையை அறவழிப் பாதையில் திருப்பவேண்டும். இதுதான் புண்ணியத் தராசுத் தட்டு இறங்கும் வழியாகும்; பரிகாரமும் பாவமன்னிப்புமாகும்.

9. ஆதியில், முதன் முதலில் ஜோதிடம் அறியப்பட்டு நடைமுறையில் இருந்தபோது, பரிகாரம் என்ற ஒன்று இருந்திருக்க முடியாது. விவேகானந்தரின் வாழ்க்கை வரலாற்றில், வழிபாடுகள் எல்லாவற்றுள்ளும் மிகத் தாழ்ந்ததுஉருவ வழிபாடுஎன்று நமது சாஸ்திரங்களில் விவரிக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.

10 பரிகாரம் என்பது ஜோதிட சாஸ்திரத்தில், உருவ வழிபாட்டை நிலை நிறுத்த, பின்னாளில் புகுத்தப்பட்ட இடைச் செருகலாகும். பல கண்மூடித்தனமான மதச் சடங்குகளும் ஜோதிடத்தால் வந்த விளைவுதான்.

11. ஆகவே ஒவ்வொருவருக்கும் ஏற்படும் இன்பதுன்பங்கள் லாப நஷ்டங்கள் அனைத்தும் எதிர்காலத்தைச் சேர்ந்தவை. எனவே எதிர்காலம் மனிதனுக்குச் சொந்தமல்ல. அது இறைவனுக்குச் சொந்தமாகும். இக்கணம், நிகழ்காலம் (presently) மட்டும்தான் மனிதனுக்குச் சொந்தமாகும்.

12. பகற்கனவு காண்பது, திட்டமிடுவது, யோசித்து முடிவு எடுப்பது ஆகிய மூன்றும் எதிர்காலத்தில் செயல்படக்கூடிய செயல்களை மனதில் மனிதனால் எடுக்கப்படுவது. ஆனால் எதிர்கால நிகழ்வுகள் ஊழ்வினையினால் இறைவனால் செயல்படுத்தப்படுவது மனிதனின் அறிவிற்கு அப்பாற்பட்டதாக, மறைபொருளாக வைக்கப்பட்டிருக்கிறது. இதை மீறி செயல்படும்பொழுதுதான், புறம்போக்கு இடத்தில் கட்டப்பட்ட கட்டிடங்கள் அகற்றப்படுவதுபோல, இறைவனின் புறம்போக்கு இடத்தில் கட்டப்படும் பகற்கனவு, திட்டமிடுதல், யோசித்து முடிவெடுத்தல் ஆகியவற்றால் செய்யப்படும் செயல்கள் பலிக்காமலும், திட்டமிட்டபடி நடக்காமல் போவதும், தவறான முடிவாகவும் ஆக்கப்பட்டு மனிதனின் ஆக்கிரமிப்பு இறைவனால் அகற்றப்படுகின்றன. மொத்தத்தில் சுருங்கச் சொன்னால் மேல்மனதிலிருந்து செயல்படும் நமது அறிவைப் (intelligence) பயன்படுத்தக்கூடாது.

13. மேல்மனதறிவு மனிதனின் அறிவாகும். அது கல்வி கற்கப் பயன்படுகிறது; தகவல்களைச் சேகரிக்கவும், ஞாபகத்தில் வைத்திருக்கவும் பயன்படுத்தப்படுகின்றன; ஞாபக சக்தியைப் பயன்படுத்தி கடந்த கால நிகழ்வுகளையும் பழகிய மக்களை ஞாபகப்படுத்தவும் பயன்படுகின்றது; கற்பனை செய்யவும், திட்டங்கள் தீட்டவும், யோசித்து முடிவெடுக்கவும் பயன்படுகின்றன.

14. அநுபவ அறிவுதான் ஆழ்மனதறிவாகும். 14 வயதுவரை அதாவது,கற்பனையில் மூழ்காதவரை, குழந்தைகளின் செயல்கள் அனைத்தும் அநுபவ அறிவை தேடுவதாகத்தான் இருக்கும். ஆகவேதான்குழந்தையும் தெய்வமும் ஒன்றுஎன்று சொல்கிறோம். கல்வி அறிவைக்காட்டிலும் அநுபவ அறிவு சிறந்தது என்பதால்தான் பன்னாட்டு நிறுவனங்களும், உள்ளுர் நிறுவனங்களும் கல்வி அறிவில் சிறந்திருந்தாலும் புதிதாக பணிக்குத் தேர்ந்தெடுப்பவர்களுக்கு, அநுபவ அறிவு பெறுவதற்காக, பயிற்சி கொடுக்கிறார்கள். வர்த்தகத்திலும் தொழிலும் அந்தப் பயிற்சியைப் பெறாமல், அவற்றில் இறங்குபவர்கள், நட்டங்கள் அடைந்து, நிறுவனங்களை மூடிவிடும், பரிதாப நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். இதனால்தான், சில விவரமுள்ள அதிபர்கள் தனது வாரிசை தன்னுடனே வைத்து பயிற்சி கொடுத்த பிறகு வாரிசின் பொறுப்பில் தொழிலை ஒப்படைப்பார்கள். சில அதிபர்கள் தனது நண்பர்களின் நிறுவனங்களில் தங்களது வாரிசுகளை, பயிற்சி பெற அனுமதிப்பார்கள். திருவள்ளுவர் பெருமகன்நுண்ணிய நூற்பல கற்பினும் மற்றுந்தன் உண்மை அறிவே மிகும்.” என்று பாடியிருக்கிறார். இங்கே அநுபவ அறிவைத்தான்உண்மை அறிவாககுறிப்பிடுகிறார். குறைந்த கல்வி அறிவைப் பெற்றவர்கள், தங்களது அநுபவறிவினால் புதியனவற்றை கண்டுபிடித்திருக்கிறார்கள் என்று வரலாறு கூறுகிறது. ஆழ்மனதறிவு ஆண்டவனின் அறிவாகும்; இறை மனிதனின் அறிவாகும்.


15. “நீ தோட்டத்திலுள்ள சகல மரங்களின் பழங்களையும் சாப்பிடலாம்; ஆனால் தோட்டத்தின் மத்தியில் உள்ள நன்மை தீமை அறியத்தக்க பழங்களை மட்டும் சாப்பிடவேண்டாம். அதை நீ சாப்பிடும் நாளில் சாகவே சாவாய் என்று இறைவன் ஆதாமுக்கு கட்டளையிட்டுச் செல்கிறார்.

16. தந்திரமுள்ள பாம்பானது ஏவாளைப் பார்த்துநீங்கள் இதைச் சாப்பிடும் நாளிலே உங்கள் கண்கள் திறக்கப்படும் என்றும், நீங்கள் நன்மை தீமைகள் அறிந்து தேவர்களைப் போல இருப்பீர்கள் என்றும் தேவன் அறிவார்என்று கூறியது.

17. அப்பொழுது ஏவாள் ஆனவள் அந்த பழம் சாப்பிடுவதற்கு நல்லதும் பார்வைக்கு இன்பமும், புத்தியை தெளிவாக்க தூண்டக்கூடிய மரமாய் இருக்கிறது கண்டு, அதன் கனியை பறித்து தானும் சாப்பிட்டு, தன் கணவனுக்கும் கொடுத்தாள். இது தான் பைபிளின் கதை.

18. இறைவன் நன்மை தரக்கூடிய அனைத்து மரங்களின் கனிகளை மட்டும் சாப்பிடவேண்டும் என்றார். அதாவது இறைவன், ஆதாமும், ஏவாளும் தனது அறிவை மட்டும் பயன்படுத்த வேண்டும் என்று சொன்னார். ஏனென்றால் இறைவனுடைய அறிவை மட்டும் பயன்படுத்தும் போதுதான் அவர்களுக்கு நன்மைகள் தொடரும். தீமைகளை அறியமாட்டார்கள்.

19. பாம்பானது, இன்பம் அளிக்கக்கூடிய புத்தி தெளிவடைய நன்மை, தீமை தரக்கூடிய மரத்தின் கனியைச் சாப்பிடத் தூண்டுகிறது. அதாவது ஆதாமும், ஏவாளும் இறைவனது அறிவை பயன்படுத்துவதை நிறுத்திவிட்டு, மனிதனுடைய அறிவை பயன்படுத்த பாம்பு தூண்டுகிறது. அதாவது (மனிதன்) தனது அறிவைப் பயன்படுத்தி முதலில் இன்பம் அடைந்தது பகற்கனவின் மூலம்தான். ஏவாள், தான் தன் கணவன் ஆதாமுடன், முந்திய இரவில் பெற்ற, தாம்பத்திய உறவில் அடைந்த இன்பத்தை நினைத்துப் (கற்பனையில்) பார்க்கிறாள். அவளது புத்தியும் செயல்முறைக்கு வந்துவிடுகிறது. முதல் முறையாக தான் நிர்வாணமாக இருப்பதை உணருகிறாள். நிர்வாணத்தை மறைக்க மரத்தை நோக்கி ஓடுகிறாள். ஆதாமும் இதே நிலைக்குத் தள்ளப்படுகிறான். அன்றைய நாளிலுருந்து இருவரும் கவன வாழ்க்கையைத் துறந்துவிட்டு, கற்பனை வாழ்க்கையைத் தழுவுகிறார்கள்.

20. கவன வாழ்க்கையிலிருந்த வரை, இறைவன் அறிவில் செயல்பட்டார்கள்; தீமைகளையும் அதனால் அடையும் துன்பஙகளையும் அவர்கள் அறிந்திருக்கவில்லை. தாங்கள் ஆடைகளின்று நிர்வாணமாக இருப்பதையும் உணரவில்லை. அவர்கள் தங்களது அறிவை பயன்படுத்தியவுடன், அவர்கள் கண்கள் திறந்து கொண்டன. தங்களது நிர்வாண நிலைமையையும் உணர்ந்து, இறைவனது கண்களுக்குப் படாமல் மரங்களுக்கிடையே ஓடி மறைகிறார்கள்.

21. நன்மை தீமை அறியத்தக்க பழங்கள் என்று இறைவன் குறிப்பிட்டதுகற்பனையைத்தான்’. அதை சாப்பிடும் நாளில் சாவது உறுதி என்றும் இறைவன் சொல்கிறார். இப்பொழுது மக்கள் தினம் தினம் செத்துப் பிழைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

22. கற்பனை செய்யும்போதுதான், மனிதன் தவறுகள் செய்கிறான். எதிர்ச்செயலாக துன்பம் வந்து சேருகிறது. கோபம், பயம், பதட்டம், பகைமை, வெறுப்பு முதலிய குணங்களைக் கொண்டு, மனிதன் சாத்தானாகிறான். சாத்தான் என்று தனியாக ஒருவன் இல்லை.

23. மனிதனுக்கு ஆசை இருக்கவேண்டும்; அது இயற்கையானதுதான்; நியாயமானதுதான். மனிதனை இயக்குவது ஆசைதான். ஆசை இல்லாவிட்டால் மனிதன் மரமாகிவிடுவான். அதனால்தான், மகான் மகரிஷி மகேஷ் யோகி அவர்கள், மனிதனின் ஆசையை நிறைவேற்றுவதற்குரிய அபரிதமான ஆற்றல் அவனுக்குள்ளேயே இருக்கிறது. அதை ஆழ்நிலைத்தியானம், சித்திப்பயிற்சி ஆகியவற்றின் மூலம் வெளிக்கொணர்ந்து பயன்படுத்தமுடியும் என்று சொன்னதோடு அல்லாமல், நடைமுறையில் நிரூபித்துக்காட்டினார். ஆசை பேராசையாக மாறக்கூடாது. மனிதனின் கற்பனைதான், அவனைப் பேராசைக்காரனாக மாற்றுகிறது.

24. ஆகவே நாம் மீண்டும் கவன வாழ்க்கையைத் தழுவி இறைவனின் அறிவுக்குள் அடக்கமாவோம். நன்மை தரும் மரங்களின் கனிகளை மட்டும் சாப்பிடுவோம்; நன்மைகள் பல பெறுவோம்.

25. இறைவனின் அறிவுக்கும், மனிதனின் அறிவுக்கும் என்ன வேறுபாடு?
பைபிளில் சொல்லப்பட்டதைப் போல, இறைவனின் அறிவை பயன்படுத்தும்போது நம்மை நன்மைகள் நிறைந்த, நல்ல வழிக்கு மட்டும் கொண்டு செல்லும். நமது வாழ்க்கையை இறைவன் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து, முழு பாதுகாப்பளிக்கிறான். மனிதன் அறிவை பயன்படுத்தும்போது, நன்மை, தீமைகள் நிறைந்த பாதையில் செல்ல வேண்டியது வரும். முன்னதைப் பயன்படுத்தும்போது, அமைதியான கடலில், தென்றல் காற்று நம்மீது தழுவ ஓடத்தில் பயணம் செய்யும் ஒரே சீரான வாழ்க்கையாக இருக்கும். இவ்வாழ்க்கையில் நோய்நொடிகள் அண்டாது. ஆனால் மனித அறிவுப்பாதையில் இன்ப துன்பங்கள் மாறி மாறி வரும், கொந்தளிக்கும் கடலில் செல்லும் பாய்மரக்கப்பலின் பயணமாக இருக்கும்.

26. இறைவனின் பாதையையும் மனிதனின் பாதையையும் பிரிக்கும் அடையாளத்தை நம்மால் காணமுடியுமா?
காண முடியும். ‘கவனமுடன் (with attention), விழிப்புணர்வுடன்(with awareness)’ வாழ்க்கையை நடத்திச் செல்லும் பாதைதான் இறைவனின் பாதை. ‘கவனமுடன்ஒவ்வொரு செயலையும் செய்யும் போது பகற்கனவு, திட்டமிடுதல், சிந்தித்து முடிவெடுத்தல் ஆகியவை காணாமல் போய்விடுகின்றன. காலம் (கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் ஆகியவை) மறைந்து விடுகிறது. இதனால் துன்பப்படுவதற்கு காலம் உங்களுக்குக் கிடைக்காமல் போய்விடுகிறது.

27. இப்பொழுது நடைமுறையில் அதாவதுகற்பனைவாழ்க்கையில் இருப்பது வேறுவிதமாக இருக்கிறது. ஒவ்வொரு செயலையும் செய்யும் போது, வேலையில்கவனம்மூன்றில் ஒரு பங்காகவும், கவனமற்ற பகுதி, மூன்றில் இரண்டு பங்காகவும் இருக்கிறது. எந்த ஒரு செயலையும் அல்லது வேலையையும் திரும்பத் திரும்பச் செய்யும்போது கைகள், கண், கால்கள் ஆகியவை அந்த வேலையில் பழக்கப்பட்டு விடுகின்றன. இதைப் பயண்டுத்திக் கொண்டு, அந்தப் பழக்கப்பட்ட வேலைகளை உடல் உறுப்புக்களைச் செய்யும்படியாக விட்டுவிட்டு மனமானது மேயச்சென்று விடுகிறது. அதாவது வேலை செய்து கொண்டிருக்கும் போதே வேலையில் கவனம் செலுத்தாமல், கற்பனையிலும், திட்டமிடுதலிலும், பிரச்சனைக்கு முடிவைக் கண்டுபிடிப்பதிலும், கடந்தகால இன்ப துன்ப நிகழ்ச்சிகளிலும் மூழ்கிவிடுகிறது. மூழ்கினா மூழ்கட்டும், அதனால் என்ன நட்டம்? இப்படி சிலருக்கு எண்ணம் வரலாம்.

28. ஒரு பெண் பாலை அடுப்பில் வைத்து காய்ச்சிக் கொண்டி ருக்கிறாள். அவளது மனம் பால் காய்ச்சலில் கவனம் செலுத்தாமல்அப்பா இவ்வளவு சீக்கிரம் போய்விட்டாரே! கணவரை எப்பொழுது மீண்டும் வேலைக்குச் சேர்த்துக் கொள்வார்கள்! பையன் இந்தத் தடவையாவது பாஸ் செய்யனும்!” என்று பலவாறான எண்ணங்களில் இருக்கும்போது பால் கொதித்து சிந்தி விடுகிறது.

29. அந்தப் பெண்ணின் மனதை தொடர்ந்து அலைபாயவிட்டதால், இங்கு மூன்று விதமான நட்டங்கள் அந்தப் பெண்ணுக்கு ஏற்படுகின்றன. அவளின் வேலையில் குறைபாடு ஏற்படுகிறது. அதாவது பால் சிந்தியதோடு மட்டுமல்லாமல் பாலின் அள்வும் குறைந்து விட்டது. கடந்தகால எதிகால நிகழ்வுகளை நினைத்து மனக்கவலை அடைந்து மனதினுள் மனவழுத்தத்தை ஏற்றிக் கொண்டாள். மனவழுத்தத்தின் மறுபக்கம் நோயின் குடியேற்றம், மூன்றாவது பலன் மனவழுத்த ஏற்றத்தினால் இருக்கிற நோய்கள் தீவிர நிலையை அடைகின்றன. புதிய நோய்கள் தோன்றுகின்றன. கடந்தகால நிகழ்ச்சியை நினைப்பது, செல்லாக்காசினை கடையில் கொடுத்து பொருள் கேட்பது போன்றது. எதிர்காலம் நமக்குச் சொந்தமல்ல. நிகழ்காலத்தில் (இக்கணத்தில்) பால் காய்ச்சுவதுதான் நமக்குரியது. அதையும் சரியாகச் செய்யாமல் பொருள் நட்டம் ஏற்படவிடுவது நல்லதா? இதற்குப் பரிகாரம் என்ன? பரிகாரம் மனம் அலைபாய்வதை நிறுத்துவதுதான். ஒரு நாள் முழுவதும் செய்யும் செயல்களில்/வேலைகளில் (பழக்கப்பட்ட வேலைகளாக அல்லது தொழில்களாக இருந்தாலும்) மனதை முழுமனதுடன் ஈடுபடச் செய்வதுதான்.

ஹீலர், மருத்துவ மனபயிற்சி நிபுணர், பொறிஞர்.ஆர்..பரமன்(அரோமணி), மேற்பார்வை பொறியாளர் (ஓய்வு)/தமிழ்நாடு மின்சார வாரியம்.
(Er.R.A.Bharaman alias Aromani)
cell:9442035291, 8754880126.

Please visit the following websites: nomedicine-tamil.com; twinmedicine.com for English 

copyright to R.A.Bharaman alias Aromani.


a
முந்தைய விளம்பரம்
அடுத்த விளம்பரம்

0 Post a Comment: